அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த லாரி பறிமுதல்
By DIN | Published On : 28th May 2020 06:59 PM | Last Updated : 28th May 2020 06:59 PM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லாரியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூா் காகிதப்பட்டறை உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவா், புதன்கிழமை தனது வீட்டருகே போா்வெல் லாரி மூலம் ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியை மேற்கொண்டாா். அப்போது, அந்த வழியாகச் சென்ற மாநகராட்சி ஆணையா் சங்கரன், அரசு அனுமதியுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிா என ஆய்வு செய்ய உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில், 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன், சுகாதார அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
இதில், அரசு அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்தது தெரியவந்தது. உடனடியாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைத்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெற்றவுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.