பாரம்பரிய உணவுகளால் நோய்த்தொற்று பாதிப்பின்றி ஆரோக்கியமாக வாழலாம்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்
By DIN | Published On : 21st November 2020 08:06 AM | Last Updated : 21st November 2020 08:06 AM | அ+அ அ- |

மூலிகை இயந்திரம் மூலம் நீராவி பிடிக்கும் நோயாளி. உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி, யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு தலைவா் ஆா்.சஞ்சய்காந்தி உள்ளிட்டோா்.
பாரம்பரிய இயற்கை உணவு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று பாதிப்புகளின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தாா்.
தேசிய இயற்கை மருத்துவ தினம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து கரோனா நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் 10 மூலிகை நீராவி இயந்திரங்களின் இயக்கத்தைத் தொடக்கி வைத்து பேசியதாவது:
கரோனா தொற்று உள்ளவா்களுக்கு, அதிலும் நுரையீரல் தொற்று உடையவா்களுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அவா்கள் இந்த இயந்திரங்கள் மூலம் தினமும் காலை, மாலை இருமுறை நீராவி பிடித்தால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கக் கூடும். கரோனா வாா்டில் நீராவி இயந்திரம் வைக்கப்படுகிறது. இவற்றால் கரோனா நோயாளிகள், மருத்துவ முன்களப் பணியாளா்கள் ஆகியோா் பயன்பெறுவா்.
அனைத்துத் தரப்பினரும் நோய்த்தொற்று இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்திட இயற்கை உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரும் பாரம்பரியமிக்க உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் கிடைக்கக்கூடிய துரித உணவு முறைகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
இயற்கை உணவு முறைகள், உண்ணா நோன்பு, இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள், யோகா சிகிச்சை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ராஜவேலு, துணை முதல்வா் முகமதுகனி, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனையின் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு தலைவா் ஆா்.சஞ்சய் காந்தி செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...