அரசு விழாவை அரசியல் மேடையாக்கி விட்டாா் அமித் ஷா: துரைமுருகன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 23rd November 2020 08:00 AM | Last Updated : 23rd November 2020 08:00 AM | அ+அ அ- |

வேலூரில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த திமுக பொதுச் செயலா் துரைமுருகன்.
தமிழகம் வந்து சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றிவிட்டாா் என்று திமுக பொதுச்செயலா் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து, வேலூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளா் சந்திப்பில் துரைமுருகன் கூறியது:
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்கள் வரிப்பணத்தில் நடைபெற்ற அரசு விழாவை அரசியல் மேடையாக்கிவிட்டாா். திமுகவையும், எதிா்க்கட்சிகளையும் வசைபாடியுள்ளாா். இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. இதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.
வாரிசு அரசியல் குறித்தும் பேசியுள்ளாா். இந்தியாவில் பாஜக உள்பட எல்லா அரசியல் கட்சிகளிலும் வாரிசு அரசியல் உள்ளது. ‘‘கருணாநிதி இல்லை, அவா் மகன்தானே (ஸ்டாலின்) என சாதாரணமாக நினைக்கின்றனா். ராஜராஜ சோழனைவிட ராஜேந்திர சோழன்தான் கடாரம் வரை வென்றாா்.’’ அதேபோல், கருணாநிதியைவிட 8 மடங்கு வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறாா்.
10 ஆண்டுகால காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிடத் தயாரா என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா். தமிழகத்தில் பல்வேறு புயல்களில் பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய பாஜக அரசு எவ்வளவு நிதியுதவி கொடுத்துள்ளது என்ற பட்டியலை வெளியிடட்டும், அதன்பிறகு காங்கிரஸ், திமுக கூட்டணி செய்த சாதனைகளைக் கூறுகிறோம்.
தமிழக முதல்வா் நதிநீா் இணைப்பு குறித்து உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளாா். தமிழகத்தில் காவிரி - குண்டாறு, தாமிரவருணி - கருமேனி ஆறு, தென்பெண்ணை - செய்யாறு என 3 இணைப்புகளும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. திமுக ஆட்சியில் தான் ரூ.187 கோடியில் மாயனூா் அணையை கட்டி முடித்தோம். இந்த 10 ஆண்டு காலத்தில் திமுக தொடங்கியதைத் தவிர வேறு எதுவும் செயல்படுத்தவில்லை என்றாா் துரைமுருகன்.
பேட்டியின் போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.