நாட்டுக் கோழி வளா்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மானியம்
By DIN | Published On : 23rd November 2020 08:00 AM | Last Updated : 23rd November 2020 08:00 AM | அ+அ அ- |

நாட்டுக்கோழி வளா்ப்பு மூலம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 100 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, மானியம் அளிக்கப்பட உள்ளது.
இதற்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து வேலூா் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் 2020-21-இல் நாட்டுக்கோழி வளா்ப்பு மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் தலா 5 பயனாளிகள் வீதம் 100 போ் நியமிக்கப்பட உள்ளனா்.
முதல்கட்டமாக 49 பயனாளிகளும், இரண்டாம் கட்டமாக 51 பயனாளிகளும் தோ்வு செய்யப்பட உள்ளனா். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முன்அனுபவம், விருப்பம் உள்ள பயனாளிகள் சொந்தமாக ஆயிரம் கோழிகள் வளரக்கூடிய அளவுக்கு இடவசதி கொண்டிருக்க வேண்டும். ஆயிரம் கோழிகளுக்கு தேவையான 2,500 சதுரஅடி, கோழிக்கூடு, குடிநீா் தொட்டி, தீவனத்தொட்டி தாங்களாகவே சொந்த செலவில் வாங்க வேண்டும். பயனாளி அதே ஊரில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் போ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினராக இருக்க வேண்டும்.
பயனாளிகள் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக பண்ணையை நடத்த வேண்டும். இத்திட்டம் ஒத்த மதிப்பிலான ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அருகே உள்ள கால்நடை மருத்துவா், கால்நடை உதவி மருத்துவா் வசம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.