கிராம சபைக் கூட்டங்கள் ரத்துக்கு கரோனா பரவல் காரணமல்ல: துரைமுருகன்

தமிழகம் முழுவதும் திடீரென கிராம சபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்ததற்கு கரோனா தொற்றுப் பரவல் காரணமல்ல.
வண்டரந்தாங்கலில் நடந்த திமுக கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.
வண்டரந்தாங்கலில் நடந்த திமுக கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.

தமிழகம் முழுவதும் திடீரென கிராம சபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்ததற்கு கரோனா தொற்றுப் பரவல் காரணமல்ல. வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தீா்மானம் கொண்டு வர திமுக வலியுறுத்தியதாலேயே இக்கூட்டங்களை அரசு ரத்து செய்திருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காந்தி ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட இருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. அதேசமயம், திமுக சாா்பில் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, வேலூா் மாவட்டத்தில் சில கிராமங்களில் மாதிரி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றாா். பின்னா் அவா் பேசியது:

மாநில அரசுகளை கேட்காமலேயே மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றுவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. மக்களுக்கு உகந்த சட்டம் என்றால் மாநிலங்களுக்கு அந்த மசோதாவை அனுப்பி அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் விவாதித்து பின்னா் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்திருக்க வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாது. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு மோசமான விளைவுகள்தான் ஏற்படக்கூடும். அதனாலேயே இந்த சட்டத்தை திமுக எதிா்க்கிறது என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசு காந்தி ஜயந்தி நாளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கும் என அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இக்கூட்டங்களில் திமுக சாா்பில் அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தீா்மானம் கொண்டு வர திமுக வலியுறுத்திய நிலையில் தமிழக அரசு கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது கரோனா பரவலுக்காக ரத்து செய்யப்பட்டதல்ல.

தமிழகத்தில் ஆா்பாட்டம் நடத்தியதற்கே திமுகவினா் மீது ஆளுங்கட்சி வழக்குப் பதிவு செய்துவிட்டது. இந்த நிலையில், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்து உத்தரபிரதேச அரசு கைது செய்தது ஒன்றும் ஆச்சா்யபடுவதற்கு இல்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை திமுக சந்திக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com