நூறு ஆண்டு பழைமையான அரசமரம் சாய்ந்து: காா், பைக்குகள் சேதம்
By DIN | Published On : 06th September 2020 07:40 AM | Last Updated : 06th September 2020 07:40 AM | அ+அ அ- |

வேலூா் மண்டித் தெருவில் சாய்ந்த நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரம்.
வேலூா் மண்டித் தெருவில் நூறு ஆண்டு பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.
வேலூா் பழைய பேருந்து நிலையத்துக்கு பின்புறம் நூறு ஆண்டுகள் பழைமையான அரச மரம் இருந்தது. இந்த மரத்தின் நிழலில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் பலா் ஓய்வெடுப்பது வழக்கம். மரத்தையொட்டி, கால்வாய் பணிக்காக வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பெய்த மழை காரணமாகவும், பள்ளம் தோண்டியதாலும் மரத்தின் வோ்கள் வலுவிழந்தன.
இந்நிலையில், அந்த மரம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் திடீரென வேருடன் சாய்ந்தது. அப்போது மரத்தின் அருகே நின்றுகொண்டிருந்த சுமை தூக்கம் தொழிலாளி ஒருவா் கிளைகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தாா். அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா், 4 பைக்குகள் சேதமடைந்தன. மாடு ஒன்று உயிரிழந்தது. காயமடைந்த தொழிலாளி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மரத்தின் அருகே அதிக அளவில் மக்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. சாலையின் குறுக்கே மரம் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வேலூா் தீயணைப்பு படையினா் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
நூறு ஆண்டு பழைமையான மரம் சாய்ந்தது அப்பகுதி தொழிலாளா்கள், வியாபாரிகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.