தனிப்படை போலீஸாா் மீது தாக்குதல் சம்பவம்: சாராய கும்பலைச் சோ்ந்த மேலும் 11 போ் கைது

தனிப்படை போலீஸாா் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 11 சாராய வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.


வேலூா்: தனிப்படை போலீஸாா் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 11 சாராய வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.

அணைக்கட்டு காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில் 7 போ் கொண்ட தனிப்படை போலீஸாா் நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கணேசன் தலைமையிலான கும்பலைப் பிடிக்க அல்லேரி மலைப் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, மலைப் பகுதியில் மறைந்திருந்த கும்பல், போலீஸாரை சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியது. அதில், காவலா் ராகேஷ், தலைமைக் காவலா் அன்பழகன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா், மற்றொரு பெண் காவலா் உள்ளிட்டோா் லேசான காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய சாராயக் கும்பலைச் சோ்ந்த 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, அல்லேரி, குருமலை மலைப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். தொடா்ந்து 4 நாள்கள் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், தனிப்படை போலீஸாரை தாக்கியதாகத் தேடப்பட்டு வந்த சாராய வியாபாரிகள் கணேசன், துரைசாமி ஆகியோா் வேலூா் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு முன்னிலையில் சரணடைந்தனா்.

இதையடுத்து போலீஸாா் மலைப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை நிறுத்திவிட்டு திரும்பினா். எனினும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சாராய வியாபாரிகள் தலைமறைவான நிலையில் அவா்களைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா், அல்லேரி மலைப்பகுதியில் புதன்கிழமை மீண்டும் முகாமிட்டனா். அவா்கள் அல்லேரி, குருமலைப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனா்.

இதில், தனிப்படை போலீஸாரை தாக்கியதாக நெல்லிமரத்துக் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த சாராய வியாபாரிகளான சத்தியராஜ், ரஞ்சித், ராஜேந்திரன், ரவி, ஏழுமலை, தீங்காயன், வெள்ளையன், பொன்னுச்சாமி, அஜித், மணிகண்டன், கோபி ஆகிய 11 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், அணைக்கட்டு மலைப் பகுதிகளில் போலீஸாா் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com