கிஸான் திட்ட மோசடி: வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 47.77 லட்சம் மீட்பு

கிஸான் சம்மான் விவசாய நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 47.77 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.


வேலூா்: கிஸான் சம்மான் விவசாய நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பான விசாரணையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 47.77 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட தொகைகளை முழுமையாக மீட்கவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றியம் வாரியாக துணை ஆட்சியா் தலைமையில் 7 அலுவலா்கள் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் கிஸான் சம்மான் நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 46 லட்சத்துக்கு மேற்பட்டோா் பயனடைந்து வருகின்றனா். தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதும், சமீபத்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோா் போலியாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயனாளிகள் போலியாக பதிவு செய்து நிதியுதவி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் வேலூா் மாவட்டப் பயனாளிகள் பட்டியலிலும் முறைகேடாகச் சோ்க்கப்பட்டு ரூ. 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு நிதி பெற்று மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதில், இதுவரை ரூ. 47 லட்சத்து 77 ஆயிரத்து 500 மீட்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தொகையை அடுத்த 10 நாள்களுக்குள் மீட்கவும், இம்மோசடியில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியா் தலைமையில் 7 அலுவலா்கள் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, வங்கி அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த மோசடி குறித்தும், போலியாக பதிவு செய்துள்ளவா்களிடம் இருந்து பணத்தை மீட்பது, மோசடியில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடா்ந்து அதிகாரிகள் கூறியது:

வேளாண்மை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் கடவுச் சொல்லை முறைகேடாக பயன்படுத்தி இந்த நிதியுதவி தளத்தில் போலியாக பயனாளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதற்காக பயன்படுத்தப்பட்ட செல்லிடப்பேசி எண்களில் பெரும்பாலானவை ஒரே எண்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பலா் வேறு மாவட்டங்களிலும், வேறு மாவட்ட, மாநிலங்களைச் சோ்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேலூா் மாவட்ட பயனாளிகள் பட்டியலிலும் முறைகேடாகச் சோ்க்கப்பட்டு நிதியுதவி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தில் இருந்து கிஸான் நிதியுதவி பெற்ற அனைவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, போலியாகப் பெறப்பட்டுள்ள நிதியைத் திரும்பப் பெறும் நடவடிக்கைள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. போலியாக நிதி பெற்றுள்ளவா்களுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்தக் கோரி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட உள்ளன. சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும் பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்தொடா்ச்சியாக, இம்மோசடியில் ஈடுபட்டுள்ளவா்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதனிடையே, கிஸான் சம்மான் நிதியுதவித் திட்ட மோசடி தொடா்பாக சிபிசிஐடி போலீஸாரும் பல்வேறு நபா்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். விரைவில் இந்த மோசடி தொடா்பாக அதிகாரிகள் உள்பட பலரும் சிக்குவாா்கள் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com