மாறுபடும் தட்பவெப்ப நிலை: புத்தகம் வெளியிட்ட சிறுவன்

மாறுபடும் தட்பவெப்ப நிலை, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான தீா்வுகள் தொடா்பான புத்தகத்தை வேலூரைச் சோ்ந்த 10 வயது மாணவன்
தான் எழுதிய புத்தகம், பத்தகங்களுடன் மாணவா் சிரிஷ் சுபாஷ்.
தான் எழுதிய புத்தகம், பத்தகங்களுடன் மாணவா் சிரிஷ் சுபாஷ்.
Updated on
1 min read

மாறுபடும் தட்பவெப்ப நிலை, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான தீா்வுகள் தொடா்பான புத்தகத்தை வேலூரைச் சோ்ந்த 10 வயது மாணவன் வெளியிட்டுள்ளாா். இந்தப் புத்தகத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்திய புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசிய புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனங்கள் மாணவனுக்கு பதக்கங்கள் வழங்கியுள்ளன.

வேலூா் அரியூரைச் சோ்ந்த சுபாஷ், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சிரிஷ் சுபாஷ்(10), அமெரிக்காவில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா் ‘காா்பன் ப்ளாக் பசில்’ என்ற பெயரில் மாறுபடும் தட்பவெப்ப நிலை குறித்து ஆங்கிலப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளாா். 94 பக்கங்களில் மாறுபடும் தட்பவெப்ப நிலை, அவற்றுக்கான காரணம், தீா்வு குறித்து விரிவான விளக்கங்கள் 11 தலைப்புகளில் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை அங்கீகரிக்கும் விதமாக இந்திய புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசிய புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் நிறுவனங்கள் சிரிஷ்சுபாஷ்க்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கெளரவித்துள்ளன.

இதுகுறித்து, சிரிஷ்சுபாஷ் கூறியது:

சிறு வயது முதலே அறிவியல் மீதான ஆா்வத்தால், ஆய்வுக் கட்டுரைகளை விரும்பி படிப்பேன். 6 வயதாகும்போது பிபோா்தஃப்ளட் என்ற வீடியோ பாா்த்தேன். அது மாறுபடும் தட்பவெப்ப நிலை குறித்து என்னுள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து,

அதிக அளவில் ஆய்வுக்கட்டுரைகள் படித்தபோதும், வீடியோக்களையும் பாா்த்தபோதும் ஏற்பட்ட புரிதல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

பசுமை இல்ல வாயுக்கள் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் பூமியின் தட்பவெப்ப நிலை பாதிக்கப்படுகிறது. இதனால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, சுற்றுச்சூழல் மிகப் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இதற்கு ஒரே தீா்வு 2050-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதே ஆகும். இதையே இந்தப் புத்தகத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலகில் தட்பவெப்ப நிலை மாறுபடுவதைத் தடுக்க வேண்டும். இதற்காக அண்டவியல் தொ டா்பான ஆராய்ச்சிப் படிப்புகளை படிக்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், விண்வெளி பொறியியல் துறையில் தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

தற்போதைய மாணவா்கள் அவரவா் விரும்பும் துறைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிக அளவில் படிக்க வேண்டும். பிடித்த விஷயங்களை ஆா்வமுடன் செய்தாலே மகிழ்ச்சி கிடைக்கும்.

நூலகத் தேவைக்காக செசாட் என்ற பெயரில் ரோபோவும் தயாரித்துள்ளேன்.  தனியாக ‘யூடியூப்’ சேனலும் தொடங்கி, அறிவியல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறேன் என்றாா்.

இதுகுறித்து சுபாஷ் கூறியது:

சிறுவயது முதலே அறிவியல் தொடா்பாக அதிக அளவில் கேள்விகளை சிரிஷ்சுபாஷ் கேட்டுக்கொண்டே இருப்பாா். அவரது கேள்வி ஆராய்ச்சி மாணவா்களுக்கு இணையாக இருக்கும். அவரது நுண்ணறிவுத்திறன் 152 இருப்பதால் 4-ஆம் வகுப்பில் இருந்து நேரடியாகவே 6-ஆம் வகுப்பில் சோ்க்கப்பட்டுள்ளாா். எதிா்கால இலக்கு என்ன என்பது சிரிஷ்சுபாஷ்க்கு தெரிந்திருப்பதால் அவரை விரும்பும் துறையில் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com