நாடு திரும்ப முடியாமல் வேலூரில் தவிக்கும் நெதர்லாந்து பெண்மணி: ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு

சமூக சேவை புரிந்திட வேலூருக்கு வந்த நெதர்லாந்து பெண்மணி, பொதுமுடக்கத்தால் கையில் கொண்டு வந்த பணத்தை இழந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிமுக நிர்வாகி எம்.டி.பாபுவுடன் வந்த நெதர்லாந்து பெண்மணி ஹென்னாமேரியிடம் விசாரணை நடத்தும் காவல்துறை.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிமுக நிர்வாகி எம்.டி.பாபுவுடன் வந்த நெதர்லாந்து பெண்மணி ஹென்னாமேரியிடம் விசாரணை நடத்தும் காவல்துறை.


வேலூர்: சமூக சேவை புரிந்திட வேலூருக்கு வந்த நெதர்லாந்து பெண்மணி, பொதுமுடக்கத்தால் கையில் கொண்டு வந்த பணத்தை இழந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அவர் நெதலாந்துக்கு தன்னை அனுப்பி வைக்க உதவும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஹென்னாமேரி (44). இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு சமூக சேவை புரியும் நோக்கத்தில் வேலூருக்கு வந்துள்ளார். பின்னர், கரோனா பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டதால் வேலூரிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே, அவர் காட்பாடி காந்திநகர் ஜெகநாதன் நகரிலுள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக இங்கேயே தங்கியிருப்பதால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. மேலும், அவர் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான விசா காலம் முடிந்துவிட்டது.

இதையடுத்து, சொந்த நாட்டுக்கு திரும்ப கையில் பணம் இல்லாமல் ஹென்னாமேரி காட்பாடியிலேயே தவித்து வந்தார். ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் காட்பாடியில் தவித்து வந்தார். அவரை அதிமுக மாணவரணி மாநில துணை செயலர் எம்.டி.பாபு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தார்.

தொடர்ந்து ஹென்னாமேரி ஆட்சியர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து தன்னை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து, எம்.டி.பாபு கூறியது:

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்னாமேரி, வேலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்திட தொண்டு நிறுவனம் தொடங்கும் திட்டத்தில் 5 மாத கால விசா அனுமதியுடன் கடந்த 2019 மே மாதம் வேலூர் வந்துள்ளார்.

அவ்வாறு தொண்டு நிறுவனம் தொடங்கிய பிறகு சொந்த நாட்டுக்கு சென்று நிதிகளை திரட்டிக் கொண்டு மீண்டும் வேலூருக்கு வந்து சேவைகள் புரிய வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆனால், அவர் வந்தபோதே பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததால் எதிர்பார்த்தபடி தொண்டு நிறுவனம் தொடங்க இயலவில்லை. தவிர, சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டதால் அவரால் சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியவில்லை.
இதனிடையே, அவர் காட்பாடி காந்திநகரிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததால், அதற்கான வாடகையாக கையில் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவு செய்துவிட்டார். இதை அடுத்து, பணத்தேவைக்காக காந்திநகரில் ஒரு வீட்டில் முதியவர் ஒருவருக்கு பணிவிடை செய்யும் வேலையில் சேர்ந்தார்.

அந்த முதியவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதை அடுத்து, அதே பகுதியிலுள்ள வேறொரு வாடகை வீட்டில் ஹென்னாமேரி தங்கியிருந்தார். ஆனால், கையில் பணம் இல்லாத தால் உணவுக்கும், வாடகை செலுத்தவும் இயலாமல் தவித்து வந்தார். அக்கம்பக்கத்தினர் அவருக்கு உணவுகள் அளித்து வந்தனர்.

இந்நிலையில், ஹென்னாமேரி குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தேன். மாவட்ட நிர்வாகம் அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர் என்றார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி கூறியது:

நெதர்லாந்து பெண்மணி ஹென்னாமேரி விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவரது விசா காலம் முடிந்தவுடனேயே அவர் தூதரத்தை தொடர்பு கொண்டு தன்னை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முயன்றிருக்கலாம். எனினும், அவர் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்தது குறித்து ஹென்னா மேரி கூறும் காரணங்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

எனினும், இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் தில்லியிலுள்ள அத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடை யே, தனது நிலை குறித்து வெளியுறவுத் துறை இணையதளத்தில் விவரங்களை தெரிவிக்க ஹென்னா மேரிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com