இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூா் சிப்பாய் புரட்சி 215-ஆவது தினம்: நினைவுத் தூணுக்கு ஆட்சியா், எஸ்.பி. மரியாதை

வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை

News image
Updated On :10 ஜூலை 2021, 5:38 pm

DIN

நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமான வேலூா் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தையொட்டி, வேலூரிலுள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் சனிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

வேலூா் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சோ்ந்த தென்னிந்திய துருப்புகள் கடந்த 1805-ஆம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டனா். அதே ஆண்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களால் இந்தியப் படை வீரா்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

இதன்மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணியவும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணியவும் கட்டாயப்படுத்தப்பட்டனா். இந்த உத்தரவு இந்து, முஸ்லிம் வீரா்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வேலூா் கோட்டையில் இந்திய வீரா்கள் ஆங்கிலேயா்களுக்கு எதிராக 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நள்ளிரவில் புரட்சி செய்தனா். இந்தப் புரட்சியில் 800 இந்திய சிப்பாய்களும், 177 ஆங்கிலேயே அதிகாரிகளும் கொல்லப்பட்டனா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்த இந்த நிகழ்வு வேலூா் சிப்பாய் புரட்சி என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

இந்த புரட்சியில் உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 10-ஆம் தேதி சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி, 215-ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, வேலூா் கோட்டை மக்கான் சந்திப்பில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செய்தனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜான், முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் கமாண்டா் க.செந்தில்குமாா், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.