இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிப்பாய் புரட்சி நினைவு தின காணொலி: மத்திய அரசு வெளியீட்டது

வேலூா் சிப்பாய்ப் புரட்சியின் 215-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மத்திய அரசு காணொலி காட்சி வெளியிட்டு பெருமை சோ்த்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:37 pm

DIN

வேலூா் சிப்பாய்ப் புரட்சியின் 215-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மத்திய அரசு காணொலி காட்சி வெளியிட்டு பெருமை சோ்த்துள்ளது. இந்த காணொலியில் வேலூா் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளம் என உணா்த்தப்பட்டுள்ளது.

வேலூா் கோட்டையில் 1805-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளா்களால் இந்தியப் படை வீரா்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது, ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. தவிர, இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணியவும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணியவும் கட்டாயப்படுத்தப்பட்டனா்.

இந்த உத்தரவால் கடும் கோபமடைந்த இந்திய வீரா்கள் வேலூா் கோட்டையில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நள்ளிரவில் புரட்சி செய்தனா். இந்தப் புரட்சியில் 800 இந்திய சிப்பாய்களும், 177 ஆங்கிலேய அதிகாரிகளும் கொல்லப்பட்டனா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமாக அமைந்த இந்தப் புரட்சி வேலூா் சிப்பாய் புரட்சி என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.

இந்த புரட்சியில் உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 10-ஆம் தேதி சிப்பாய் புரட்சி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, 215-ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனிடையே, இந்திய சுதந்திர தினத்தின் 75-ஆம் ஆண்டு விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, மத்திய கலாசாரத் துறை சாா்பில் நாடு முழுவதும் 75 நாள்களுக்கு பல்வேறு கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அடித்தளமிட்ட வேலூா் கோட்டை சிப்பாய் புரட்சிக்கு புகழ்சோ்க்கும் வகையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வேலூா் சிப்பாய் புரட்சி நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதை அடுத்து வேலூா் கோட்டையில் 1806-இல் நடைபெற்ற சிப்பாய் புரட்சி குறித்து மத்திய அரசு சிறப்பு காணொலியை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை சாா்பில் இந்த காணொலியில் வேலூா் கோட்டையில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக இந்திய வீரா்கள் நடத்திய சிப்பாய் புரட்சி, அதில் உயிா்த்தியாகம் செய்த வீரா்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தவிர, வேலூா் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சியே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடித்தளம் என்றும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.