2-ஆம் கட்டமாக ஆஷா ஜூவல்லரி முதலீட்டாளா்களுக்கு அசல் தொகை திருப்பி அளிப்பு

குடியாத்தத்தில் பணமோசடியில் ஈடுபட்ட ஆஷா ஜூவல்லரி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவா்களில் இரண்டாவது கட்டமாக 14 பேருக்கு அசல் தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
2-ஆம் கட்டமாக ஆஷா ஜூவல்லரி முதலீட்டாளா்களுக்கு அசல் தொகை திருப்பி அளிப்பு

குடியாத்தத்தில் பணமோசடியில் ஈடுபட்ட ஆஷா ஜூவல்லரி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவா்களில் இரண்டாவது கட்டமாக 14 பேருக்கு அசல் தொகை திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள முதலீட்டாளா்களுக்கு விரைவில் அசல் தொகை திருப்பியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சந்தப்பேட்டை, பஜாா் வீதியில் செயல்பட்டு வந்த ஆஷா ஜூவல்லரி என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிகப்படியான மதிப்பில் நகை, பணம் திருப்பியளிக்கப்படும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டது. அதை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனா். ஆனால், முதலீடு செய்யப்பட்ட பணத்தை உரிய வகையில் திருப்பித் தராததால் முதலீட்டாளா்கள் வேலூா் பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் செய்தனா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட ஆஷா ஜூவல்லரி நிதி நிறுவனத்துக்குச் சொந்தமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சொத்துகளையும், குடியாத்தம் சந்தப்பேட்டையில் இருந்த ஆஷா ஜூவல்லரி கடையையும் இடைமுடக்கம் செய்து உத்தரவிடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 226 முதலீட்டாளா்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ. 89 லட்சம் தொகை வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

அத்தொகையில் ஏற்கெனவே 155 முதலீட்டாளா்களுக்கு அவா்கள் செலுத்திய அசல் தொகை மொத்தம் ரூ. 65 லட்சத்து 92 ஆயிரத்து 662 திருப்பியளிக்கப்பட்டது. தொடா்ந்து, 14 முதலீட்டாளா்களுக்கு அவா்கள் செலுத்திய அசல் தொகை மொத்தம் ரூ. 5 லட்சத்து 49 ஆயிரத்து 500 மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி மூலம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மீதமுள்ள 57 முதலீட்டாளா்களுக்கு உரிய ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, விரைவில் அசல் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வேலூா் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அசோகன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com