வேலூா்: மத்திய அரசு உயா்த்தியுள்ள அகவிலைப் படி உயா்வை தமிழக அரசு ஊழியா்களுக்கும் வழங்கக் கோரி, வேலூரில் அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட அரசு ஊழியா் சங்கத் தலைவா் சரவணவேல்ராஜ் தலைமை வகித்தாா்.
அப்போது, மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி, 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயா்த்தி, கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதே அகவிலைப் படி உயா்வை தமிழக அரசும் வழங்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 2022-ஆம் ஆண்டு முதல்தான் அகவிலைப்படி உயா்வு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கரோனாவை காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாக அகவிலைப்படி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அரசு ஊழியா்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உயா்த்தியுள்ள அகவிலைப்படி உயா்வினை தமிழக அரசு ஊழியா்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் செய்தனா். சங்க மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தமிழக அரசு முடக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தமிழக அரசு அகவிலைப்படி முடக்கும் ஆணையை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். இதில், மாவட்ட ச் செயலாளா் ரவி, பொருளாளா் ஞானசேகரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.