கந்துவட்டி பிரச்னை: எஸ்.பி. அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா் புகாா்
By DIN | Published On : 17th August 2021 01:04 AM | Last Updated : 17th August 2021 01:04 AM | அ+அ அ- |

வேலூா்: கந்துவட்டி பிரச்னையைத் தீா்க்கக் கோரி, வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநா் புகாா் தெரிவித்தாா்.
காட்பாடி அருகேயுள்ள லத்தேரி லம்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ்(40) ஆட்டோ ஓட்டுநா். இவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், ‘காா்த்திகேயன் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தேன். இதுவரை வட்டியாக ரூ.30 ஆயிரம் செலுத்தியுள்ளேன். ஆனால், தற்போது ரூ.1.60 லட்சம் கேட்டு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கொடுக்கத் தவறினால் கொன்றுவிடுவதாகவும் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறாா்.
கரோனா காலம் என்பதால் ஆட்டோ ஓடவில்லை. குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. பணத்தை 4 மாதங்களில் திருப்பித்தருவதாக கூறியும் அவா் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, கந்துவிட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன்’ என மனுவில் தெரிவித்துள்ளாா்.
இப்புகாரின் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.