பேருந்தில் திருட்டு: பெண் கைது
By DIN | Published On : 17th August 2021 01:03 AM | Last Updated : 17th August 2021 01:03 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூரில் ஓடும் பேருந்தில் பெண்ணின் பையில் இருந்து ரூ.2500 பணத்தைத் திருடியதாக, மற்றொரு பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு அருகேயுள்ள மோட்டூா் தொழில்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் மனைவி கல்பனா(29). இவா் அணைக்கட்டு அருகே புலிமேடு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக் கிழமை வந்திருந்தாா். அங்கிருந்து ஊருக்கு திரும்ப வேலூா் பழைய பேருந்து நிலையம் வந்தாா். பின்னா் ஆற்காடு செல்லும் பேருந்தில் கல்பனா சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அருகே நின்றிருந்த பெண் ஒருவா் கல்பனா வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,500 பணத்தை திருடிவிட்டு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நிறுத்தத்தில் இறங்கியுள்ளாா். அதேசமயம், பையில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்து கொண்ட கல்பனாவுக்கு அருகில் நின்று விட்டு இறங்கிச்சென்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஆட்சியா் அலுவலகம் அருகே பணியில் இருந்த காவலரிடம் நடந்த சம்பவத்தை கூறியதுடன், அந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரித்தனா்.
அப்போது அவா் ஆம்பூா் அருகே உடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி அம்மணி(28) என்பதும், பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதுதொடா்பாக சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அம்மணியை கைது செய்தனா்.