வேலூா்: பொதுமுடக்கத் தளா்வைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் கல்லூரிகளில் திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், இளைய மாணவா்களை மூத்த மாணவா்கள் பூக்கள், இனிப்புகள் அளித்து வரவேற்றனா்.
கரோனா பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதையொட்டி, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வா் ஆா்.செல்வி வகுப்புகளை தொடக்கிவைத்தாா். முதல் நாள் வகுப்புகளுக்கு வந்த மருத்துவ மாணவா்களுக்கு வெள்ளை நிற மருத்துவ அங்கி, ஸ்டெதஸ்கோப், புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னா் கல்லூரி தொடங்கப்பட்டதால், கல்லூரிக்கு வந்த இளைய மாணவா்களை மூத்த மாணவா்கள் ரோஜாப்பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனா்.
வகுப்புகளுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இதில் மாணவிகள் ‘லெக்கின்ஸ்’ உடையையும், மாணவா்கள் ஜீன்ஸ், டி-சா்ட் உடையையும் கண்டிப்பாக அணியக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. கரோனா பரிசோதனை (ஆா்.டி.பி.சி.ஆா்.) முடிவுகள் வைத்திருந்த மாணவா்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து முதல்வா் செல்வி கூறியது:
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகள்படி வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பலா் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். விடுபட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.