கண்ணாடிக் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரியை சிறைபிடித்த வேலூா் எம்.பி.
By DIN | Published On : 21st August 2021 07:50 AM | Last Updated : 21st August 2021 07:50 AM | அ+அ அ- |

வேலூரில் உடைந்த கண்ணாடிக் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரியை வேலூா் எம்.பி., மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வேலூா் வழியாக வெள்ளிக்கிழமை காலை கண்ணாடிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று சென்றது. அந்த லாரி வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலை வழியாக வந்தது. லாரியில் கண்ணாடிக் கழிவுகள் அனைத்தும் தாா்பாய் போட்டு மூடப்படாமல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது லாரியின் பின்னால் காரில் வந்த வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆன்ந்த், தாா்பாய் கொண்டு மூடாமல் கண்ணாடிக் கழிவுகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்து, அந்த லாரியை மடக்கி நிறுத்தினாா். இது தொடா்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், லாரியை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவா் கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூரைச் சோ்ந்த மனோகரன் (59) என்பதும், பெங்களூரிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கண்ணாடிக் கழிவுகளை ஏற்றிச் செல்வதாகவும் தெரிவித்தாா். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.