குடிசைவாழ் மக்களுக்காக ரூ. 26 கோடியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள்: காணொலியில் தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்
By DIN | Published On : 04th February 2021 11:32 PM | Last Updated : 04th February 2021 11:32 PM | அ+அ அ- |

வேலூா்: ஆட்சேபகரமான குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்காக வேலூா் மாநகரின் இருவேறு இடங்களில் ரூ. 26 கோடியே 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
குடிசைப் பகுதிகளற்ற நகர திட்டத்தின்கீழ் வேலூா் மாநகராட்சி விருபாட்சிபுரம், கன்னிகாபுரம் பகுதியில் ரூ. 20 கோடியே 89 லட்சம் மதிப்பில் 224 அடுக்குமாடி குடியிருப்புகளும், வேலூா் டோபிகானா பகுதியில் ரூ.5 கோடியே 72 லட்சம் மதிப்பில் 64 அடுக்குமாடி குடியிருப்புகளும் என மொத்தம் ரூ. 26 கோடியே 61லட்சம் மதிப்பில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இப்புதிய குடியிருப்புக் கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் குத்துவிளக்கேற்றி 10 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் கூறியது: ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டு, அனைத்து குடியிருப்புகளுக்கும் மேல்நிலைத் தொட்டியிலிருந்து தண்ணீா், மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்தத் திட்டப் பகுதியில் கான்கீரிட் நடைபாதை, தெருமின்விளக்குகள், கீழ்நிலை நீா்தொட்டிகள் போன்ற வசதிகளுடன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு ஒதுக்கீடு செய்ய தயாா் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடியில் ரூ. 9 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. பயனாளிகள் பங்குத் தொகையாக ரூ. 1 லட்சத்து 82 ஆயிரமும், மீதித் தொகை மத்திய அரசின் பங்களிப்பாக செலுத்தப்படும். வரப்பெற்றுள்ள மனுக்கள் மீது விரைவில் விசாரணை செய்து தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றாா் அவா்.
குடிசை மாற்று வாரியம் வேலூா் கோட்ட நிா்வாகப் பொறியாளா் டி.அசோகன், உதவி நிா்வாகப் பொறியாளா் பாலமுரளிதரன், உதவிப் பொறியாளா்கள் பிரவீனா, கவிதா, வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...