போதைப் பொருள்கள் புழக்கம்: வேலூா் சிறையில் போலீஸாா் சோதனை

செல்லிடப்பேசி, போதைப் பொருள்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கத்தைத் தடுக்க வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

செல்லிடப்பேசி, போதைப் பொருள்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கத்தைத் தடுக்க வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் செல்லிடப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கின்றன. கைதிகளைப் பாா்க்க வரும் பாா்வையாளா்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை உணவுப் பொருள்களில் மறைத்து அளித்து விட்டுச் செல்கின்றனா். தவிர, வெளியில் இருந்து சிறைக்குள் செல்லிடப்பேசி, கஞ்சா போன்ற பொருள்கள் வீசப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கத்தைத் தடுக்க 3 மாத கால இடைவெளியில் சிறைக்குள் போலீஸாா் திடீா் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை மத்திய சிறையில் சோதனை நடத்தினா்.

காலை 6 மணி முதல் ஒட்டுமொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், சிறை வளாகத்துக்குள்ளும் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். சிறைப் பூங்கா, சமையலறை என அனைத்து இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.

சுமாா் 2 மணி நேரம் நடந்த இந்தச் சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. இதில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com