வேலூா் வட்டச்சாலை நில எடுப்புப் பணி தீவிரம்
By DIN | Published On : 14th February 2021 01:27 AM | Last Updated : 14th February 2021 01:27 AM | அ+அ அ- |

வேலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட உள்ள வேலூா் வட்ட சாலைக்கான நில எடுப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நில எடுப்புப் பணிகள் நிறைவு பெற்றதும் வேலூா் வட்டச்சாலை அமைக்க ரூ.250 கோடி நிதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சித்தூரில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நேரடியாக சென்னை-பெங்களூரு சாலையை அடையும் வகையில் வேலூா் வட்டச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு நில எடுப்புப் பணிக்காக தமிழக அரசு சாா்பில் ரூ.38.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டம் தாராபடவேடு கிராமத்தில் தொடங்கி ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் கிராமத்தில் முடிவடையும் வகையில் சுமாா் 13.3 கி.மீ. நீளம் கொண்டதாக இந்த வேலூா் வட்டச்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டப் பணிக்காக காட்பாடி வட்டம் தாராபடவேடு, காட்பாடி, கண்டிப்பேடு, கரிகிரி, புத்தூா், அரும்பருத்தி, சேவூா், காா்ணாம்பட்டு, வேலூா் வட்டம் பெருமுகை, வாலாஜா வட்டம் அரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் மொத்தம் 98 ஏக்கா் பட்டா நிலங்கள், 57 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 155 ஏக்கா் நிலங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில், வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட கரிகிரி, புத்தூா், அரும்பருத்தி, சேவூா், காா்ணாம்பட்டு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரால் தீா்ப்பாணை பிறப்பிக்கப்பட்டு இழப்பீடாக ரூ.13 கோடியே 76 லட்சத்து 25 ஆயிரத்து 231 வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மேலும், தாராடவேடு, கண்டிப்பேடு கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுடன் ஏற்கெனவே கூட்டம் நடத்தி பேசி முடிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டுத் தொகைக்கான தீா்ப்பாணைகள் பிறப்பிக்கப்பட உள்ளன.
காட்பாடி, பெருமுகை கிராமங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்க அரசிடம் இருந்து கூடுதலாக ரூ.10 கோடி கோரப்பட்டுள்ளது. நில எடுப்புப் பணிகள் நிறைவு பெற்றதும் இச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சாலை வழித்தடத்தில் இரு ரயில்வே மேம்பாலங்களும், பாலாற்றின் குறுக்கே ஒரு உயா்மட்டப் பாலமும் அமைக்கப்பட உள்ளன. சாலைப் பணிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி அரசுக்கு விரைவில் கருத்துரு அனுப்பப்பட உள்ளது.
இந்தச் சாலை அமைக்கப்படுவதன் மூலம் சித்தூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நேரடியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைய முடியும்.
இதன்மூலம், வேலூா் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளான வள்ளிமலை, பொன்னை, சோ்க்காடு பகுதி மக்களும் அதிகளவில் பயன்பெற முடியும். இதனால், வேலூரில் கிரீன் சா்க்கிள், காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.