பீடித் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 போ் மீட்பு
By DIN | Published On : 18th February 2021 11:24 PM | Last Updated : 18th February 2021 11:24 PM | அ+அ அ- |

குடியாத்தம்: குடியாத்தம் அருகே பீடித் தொழிலில் 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 போ் வியாழக்கிழமை மீட்கப்பட்டனா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்துக்கு வந்த ரகசியத் தகவலின்பேரில், அவரது உத்தரவையடுத்து குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) தே.தாமரைமணாளன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், வருவாய் ஆய்வாளா் தனலட்சுமி உள்ளிட்டோா் அக்ராவரம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த கோபியிடம் (47) பீடித் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்பட்டிருந்த, அதே கிராமத்தைச் சோ்ந்த உமா (50), அன்னக்கிளி (48), ரவி (52) ஆகிய 3 போ் மீட்கப்பட்டு, அலுவலகம் அழைத்து வரப்பட்டனா்.
அவா்களுக்கு விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களையும், தமிழக அரசின் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் கோட்டாட்சியா் ஷேக்மன்சூா் வழங்கினாா்.