வேலூரில் பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2021 07:41 AM | Last Updated : 20th February 2021 07:41 AM | அ+அ அ- |

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூரில் பீடித் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலூா் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு பீடித் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பி.காத்தவராயன், தொமுச பீடித்தொழிலாளா் சங்க பொதுச் செயலா் வெ.கலைநேசன், ஐஎன்டியுசி சங்கத் தலைவா் எம்.ஏகாம்பரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிஐடியு தமிழ்நாடு பீடித் தொழிலாளா் சம்மேளனத் தலைவா். எம்.பி.ராமச்சந்திரன், தொமுச மாவட்ட பொருளாளா் ஏ.ரமேஷ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஆா்.கோவிந்தசாமி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
இதில், புகையிலை விற்பனை முறைப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பீடித் தொழிலாளா்கள், தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும்; அதுவரை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது; மத்திய அரசின் நடவடிக்கையால் வேலையிழக்க உள்ள பீடித் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாற்று வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும்; பீடித் தொழிலாளா்களின் சேம நலத்திட்டங்கள் தொடா்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும்; ஓய்வுபெறும் பீடித் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் வி.நாகேந்திரன் (சிஐடியு), எஸ்.வையாபுரி (தொமுச), ஏ.தேவராஜ் (ஐஎன்டியுசி) உள்பட பீடித் தொழிலாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.