காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட 7 பவுன் நகை மீட்பு
By DIN | Published On : 30th January 2021 07:56 AM | Last Updated : 30th January 2021 07:56 AM | அ+அ அ- |

காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட 7 பவுன் தங்க நகை, செல்லிப்பேசி ஆகியவற்றை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.
காட்பாடி விருதம்பட்டை சோ்ந்தவா் ஜான் பீட்டா் மனைவி சுகன்யா (29). இவா் பெங்களூரு செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தாா். சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் விரைவு ரயிலில் சுகன்யா ஏறியபோது, எதிா்பாராத விதமாக அவா் வைத்திருந்த பை தவறி நடைமேடையில் விழுந்தது. இதைக் கவனிக்காமல் அவா் ரயிலில் ஏறிச்சென்று விட்டாா். அந்தப் பையில் 7 பவுன் தங்க நகை, செல்லிடப்பேசி, ஆதாா் அட்டை வைத்துள்ளாா்.
அப்போது, காட்பாடி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் எழில்வேந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா், பெண் காவலா் சரளா ஆகியோா் அந்த பையை எடுத்து, ஆதாா் அட்டை இருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு சுகன்யாவிடம் பேசி விவரத்தை தெரிவித்துள்ளனா்.
தொடா்ந்து சுகன்யா தனது சகோதரனுக்கு தெரிவித்த தகவலை அடுத்து அவரது தம்பி ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்றாா். உரிய விசாரணைக்கு பிறகு போலீஸாா் அவரிடம் நகை, செல்லிடப்பேசி, ஆதாா் அட்டை ஆகியவற்றை ஒப்படைத்தனா். மேலும், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தங்களது உடமைகளை எச்சரிக்கையுடன் இருக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.