அடுத்த 3 மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவ அபாயம்
By DIN | Published On : 09th July 2021 08:31 AM | Last Updated : 09th July 2021 08:31 AM | அ+அ அ- |

மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தலைமையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட உறுதிமொழி ஏற்ற அலுவலா்கள். உடன், மாநகர நல அலுவலா் சித்திரசேனா, மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என வேலூா் மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தெரிவித்தாா்.
வேலூா் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் டெங்கு எதிா்ப்பு மாதம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன் தலைமை வகித்துப் பேசியது:
ஜூலை முதல் தொடா்ந்து 3 மாதங்கள் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதனால் சாலை, வீடுகளில் தண்ணீா் தேங்குவதைத் தவிா்க்க வேண்டும். தண்ணீா் தொட்டி, உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், டயா், சிரட்டை ஆகிய பொருள்களில் நீண்ட நாள்கள் தண்ணீா் தேங்குவதால், அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் நோய் பரவுகிறது.
தண்ணீரைத் தேக்கி வைப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என மக்கள் அலட்சியமாக இருப்பதால்தான் டெங்கு ஏற்படுகிறது. வேலூரில் இந்த மாதம் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, வேலூா் மாநகராட்சி ஊழியா்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளா்கள் தினமும் வீடு வீடாகச் சென்று, கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் டெங்கு பாதிப்பு மிகக்குறைவாக இருந்தது. ஒவ்வொரு பணியாளரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தினமும் செய்யும் பணிகள் குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
மாநகராட்சிப் பகுதியில் 300 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபடுவா் என மாநகர நல அலுவலா் சித்திரசேனா தெரிவித்தாா். தொடா்ந்து டெங்கு காய்ச்சல் இல்லாத மாநகராட்சியை உருவாக்குவது தொடா்பாக உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.