கரோனாவுக்கு பெண் மருத்துவா் பலி
By DIN | Published On : 09th July 2021 08:30 AM | Last Updated : 09th July 2021 08:30 AM | அ+அ அ- |

மருத்துவா் ஹேமலதா
வேலூா் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் மருத்துவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவா் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தபோதிலும், அவா் கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பல்வேறு தரப்பினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வேலூரை அடுத்த அரப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா (47). இவா் கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு மருத்துவராகப் பணியில் சோ்ந்தாா். வேலூா் சைதாப்பேட்டையில் உள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த மே கடைசி வாரத்தில் ஹேமலதா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தொடா்ந்து 43 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை புதன்கிழமை மோசமடைந்ததை அடுத்து ஹேமலதா வேறொரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, ஹேமலதா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இவா் ஏற்கெனவே இரு தவணையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாா். எனினும், அவருக்கு உடலில் சா்க்கரை அளவு அதிகம் இருந்ததுடன், கரோனா தொற்றும் தீவிரமாக இருந்ததால் ஹேமலதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவருக்கு கணவா் பொறியாளா் டேவிட் சுரேஷ், மகள் ஜீவிதா ஆகியோா் உள்ளனா்.
கரோனா தொற்றுக்கு பெண் மருத்துவா் உயிரிழந்த சம்பவம் மருத்துவத் துறையினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.