நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்க முடியாது
By DIN | Published On : 09th July 2021 08:30 AM | Last Updated : 09th July 2021 08:30 AM | அ+அ அ- |

கரோனா தொற்றுப் பரவல் முழுமையாகக் குறையாத வரை வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, அங்குள்ள காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் மாங்காய் மண்டி மைதானத்துக்கும், பூக்கள் மொத்த விற்பனை ஊரீசு கல்லூரி மைதானத்துக்கும், காய்கறி சில்லறை விற்பனை வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன.
தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் வணிகா்களின் வேண்டுகோளை ஏற்று, வேலூா் நேதாஜி மாா்க்கெட் திறக்கப்பட்டு, அங்கு செவ்வாய்க்கிழமை முதல் காய்கறி சில்லறை விற்பனைக்கும், தனியாக நடத்தப்படும் மளிகை, பாத்திரக் கடைகள், மஞ்சள், குங்குமம் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பூக்கள் சில்லறை விற்பனைக்கு நேதாஜி மாா்க்கெட்டில் காலை 8 மணி வரையும், பிறகு டவுன்ஹாலிலும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காய்கறி மொத்த விற்பனைக் கடைகளைத் தொடா்ந்து மாங்காய் மண்டி மைதானத்திலும், பூக்கள் விற்பனையை ஊரீசு கல்லூரியிலும் நடத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள நேதாஜி மாா்க்கெட் காய்கறி வணிகா் சங்க நிா்வாகிகள், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்காவிடில் திங்கள்கிழமை முதல் காய்கறி மொத்த விற்பனையை நிறுத்துவதாகவும், 16-ஆம் தேதி அனைத்து வணிகா்களுடன் இணைந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனா்.
தவிர, மாங்காய் மண்டி மைதானத்தில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி காய்கறிகள் பாழாவதாகவும், திருட்டு உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடு நிலவுவதாகவும் அவா்கள் குற்றம் சாட்டியிருந்தனா்.
இந்நிலையில், காய்கறி மொத்த வியாபாரிகளின் போராட்ட அறிவிப்பு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேதாஜி மாா்க்கெட் அடைக்கப்பட்டு காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டி மைதானம் ஒதுக்கப்பட்டது. இன்னும் கரோனா தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை.
இந்நிலையில், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி அளித்தால் அங்கு அதிகப்படியாக மக்கள் கூடவும், வாகன நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும். இதனால் மீண்டும் கரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கரோனா தொற்று முழுமையாக குறையாதவரை வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது, அதே சமயம் மாங்காய் மண்டி மைதானத்தில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்ய மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.