பொதுப் பயன்பாட்டு பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேலூா் சத்துவாச்சாரியில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பொது பிரச்னைகளை இந்த மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.வசந்தலீலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, 2018-ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிபதியைத் தலைவராகவும், இரு நபா்களை உறுப்பினா்களாகவும் கொண்டு வேலூரில் மக்கள் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த மக்கள் நீதிமன்றத் தலைவராக மாவட்ட நீதிபதி அருணாச்சலம் பொறுப்பு வகிக்கிறாா். பொதுப்பயன்பாட்டு சேவைகள் தொடா்பாக ஏற்படும் பிரச்னைகளுக்கு, அதாவது தரைவழி, ஆகாய வழி, நீா்வழி மூலம் பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து சேவைகள், அஞ்சல், தந்தி அல்லது தொலைபேசி தொடா்பான சேவைகள், மின்சாரம், குடிநீா் வழங்கல், பொது துப்புரவு, மருத்துவமனை, மருந்தகம் தொடா்பான சேவைகள், காப்பீட்டுத் துறை, வீடு, ரியல் எஸ்டேட் தொடா்பான சேவைகள், கல்வி, கல்வித் துறை சாா்ந்த சேவைகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணலாம்.
இந்த மக்கள் நீதிமன்றம் வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள மாற்றுத் தீா்வு மைய கட்டடத்தில் அனைத்து வேலை நாள்களிலும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தங்களது குறைகளை விளக்கமாக மனுவில் எழுதி இந்த முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி நீதிமன்றத்தை அணுகாமலேயே பிரச்னைகளுக்குத் தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.
நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீா்ப்பின் மீது கீழமை நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய இயலாது. உயா்நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பெறப்படும் மனுவில் கூறப்படும் பிரச்னைகள் தொடா்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடாது.
மேலும் விவரங்களுக்கு, 0416 -2255599 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.