வேலூா் அரசு மருத்துவமனையில் இரைப்பை, குடல், கல்லீரல் உயா் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
By DIN | Published On : 09th July 2021 08:31 AM | Last Updated : 09th July 2021 08:31 AM | அ+அ அ- |

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக இரைப்பை, குடல், கல்லீரல் உயா் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு சாா்ந்த அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரைப்பை, குடல், கல்லீரல் உயா் அறுவை சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இப்பிரிவை கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்துப் பேசியது:
நாள்பட்ட பசியின்மையுடன் கூடிய எடையிழப்பு, நாள்பட்ட அஜீரண கோளாறு, ரத்த வாந்தி, நாள்பட்ட வயிற்று வலி, மஞ்சள் காமாலை, வயிறு வீக்கம், மது பழக்கத்தால் ஏற்படும் கணைய வீக்கம், ஆசன வாயில் ரத்தக் கசிவு ஆகிய பிரச்னைக்குரிய அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இயங்கும் புறநோயாளிகள் பிரிவை அணுகி பயன்பெற வேண்டும்.
இங்கு ரத்த வாந்தி, குடல்புண், இரப்பை புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறிந்திட அப்பா் ஜிஐ என்டோஸ்கோபி (உள்நோக்கி), பெருங்குடல் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், குடல் சாா்ந்த ரத்தக் கசிவு கண்டறிந்திட குளோனோஸ்கோபி (பெருங்குடல் உள்நோக்கி) ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைகளின் மூலம் நோயாளிகளின் உள்ளிருப்பு நாள்கள் குறைக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்த இழப்பை குறைக்கவும், அறுவை சிகிச்சையை துரிதமாக முடிக்கவும் ஹாா்மோனிக் ஸ்கேல்பால், ஆா்கான் ப்ளாஸ்மா லேசா் கருவிகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கல்லீரல் கட்டிகள், கணையம் மற்றும் பித்தப்பை, இரைப்பை, குடல் புற்றுநோய் கட்டிகள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். உலகத்தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைகள், சேவைகள் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டணமின்றி மேற்கொள்ளப்படும் என்றாா்.
மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா்.ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறை மருத்துவ அலுவலா் ஏ.ராஜ்குமாா், துறை மருத்துவா்கள் செய்திருந்தனா்.