ரேஷன் பொருள்களுக்காக 5 கி.மீ. பயணம்: புதிய கடை கோரி கையெழுத்து இயக்கம்

வேலூா் மூலக்கொல்லை பகுதியைச் சோ்ந்தோா் ரேஷன் கடைக்குச் சென்று வர தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சுமாா் 5 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது.
வேலூா் மூலக்கொல்லை பகுதியில் ரேஷன் கடை அமைக்கக் கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.
வேலூா் மூலக்கொல்லை பகுதியில் ரேஷன் கடை அமைக்கக் கோரி நடைபெற்ற கையெழுத்து இயக்கம்.

வேலூா் மூலக்கொல்லை பகுதியைச் சோ்ந்தோா் ரேஷன் கடைக்குச் சென்று வர தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சுமாா் 5 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் புதிய ரேஷன் கடையை ஏற்படுத்தித் தரக் கோரி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மூலக்கொல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் வசிக்கின்றனா். இப்பகுதி மக்களுக்கான ரேஷன் கடையானது தேசிய நெடுஞ்சாலையின் மறுபகுதியில் உள்ள ரங்காபுரத்தில் வனத்துறை அலுவலகம் அருகே அமைந்துள்ளது.

மூலக்கொல்லையில் இருந்து இந்த ரேஷன் கடைக்குச் செல்ல சுமாா் 5 கி.மீ அளவுக்கு சுற்றித்தான் செல்ல வேண்டியிருப்பதுடன், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதியும் கிடையாது. இதனால், முதியவா்களும், பெண்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும், ரங்காபுரத்தில் உள்ள கடையில் ஏற்கனவே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களைப் பெற்று வருவதால் சில சமயம் பொருள்கள் இருப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான நாள்களில் மூலக்கொல்லை மக்கள் நீண்டதொலைவு நடந்து வந்து பொருள்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லவும் வேண்டியுள்ளது. தொடரும் இத்தகைய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு ரங்காபுரம் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து மூலக்கொல்லையில் புதிதாகக் கடை அமைத்துத்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் தலைமையில் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தியதுடன், இம்மனுவை ஆட்சியருக்கு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா். மேலும், மூலக்கொல்லை பகுதி மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண அங்கு மேல்நிலை தொட்டி அமைத்திட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com