ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் நிலங்கள் மீட்கப்படும்
By DIN | Published On : 29th June 2021 07:51 AM | Last Updated : 29th June 2021 07:51 AM | அ+அ அ- |

அா்ச்சகா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. உடன், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள்.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்படும் என்று தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அா்ச்சகா், பட்டாச்சாரியாா், பூசாரி, திருக்கோயில் பணியாளா்கள் என 346 பேருக்கு கரோனா பொது முடக்க கால நிவாரணமாக தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்கம், தலா 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருள் தொகுப்புகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி, வேலூா் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:
கரோனா தடுப்பு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முதல்வா் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் ரொக்கமும், 14 வகையான மளிகைப் பொருள்களையும் வழங்கினாா். முன்களப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அந்த வகையில், கோயில் அா்ச்சகா்களுக்கும் நலத் திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, கோயில் பராமரிப்பு பணிகளுக்கு போதிய நிதியை ஒதுக்கினாா். அவா் வழியில் செயல்படும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோயில்களின் சொத்துகளை மீட்டு திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளாா்.
கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வேலூா் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரம் போ் தடுப்பூசி போட்டுள்ளனா். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் நிலங்களை முழுமையாக மீட்கவும் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா்(அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), க.தேவராஜ் (ஜோலாா்பேட்டை), ஆ.நல்லதம்பி (திருப்பத்தூா்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), ஆ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் இணை ஆணையா் அ.பரஞ்ஜோதி வரவேற்றாா்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் அ.முகமது சகி, மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் பா.விஜயா, நரசிங்க பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலா் ஜெயா, செல்லியம்மன் கோயில் செயல் அலுவலா் வஜ்ரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.