ஒருங்கிணைந்த வேலூரில் 49 நாள்களுக்குப் பின் அரசுப் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 29th June 2021 07:45 AM | Last Updated : 29th June 2021 07:45 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 49 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதேபோல், இம்மாவட்டங்களில் உள்ள ஜவுளி, நகைக் கடைகள் உள்பட பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அரசு, தனியாா் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. தற்போது பொது முடக்கம் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள அதேசமயம், தொற்று குறைந்து வரும் வேலூா் உள்பட 27 மாவட்டங்களில் 50 சதவீதப் பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் இயங்கத் தொட ங்கின. அரசு தடை விதித்துள்ள சேலம், கோவை, தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், வேலூா் மண்டலத்தில் இருந்து 227 நகரப் பேருந்துகள், 228 புற நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பேருந்துகள் இயங்கத் தொடங்கியதை அடுத்து, வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலையிலேயே சென்னை, தாம்பரம் செல்லும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவும், மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் கூட்டம் குறைவாகவும் இருந்தது. நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் நகரப் பேருந்துகளை தேடிச் சென்று பெண்கள் பயணம் செய்தனா். முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே பேரு ந்துகளில் ஏற அனுமதிக்கப்பட்டனா். அதேசமயம், வேலூரில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய விரைவுப் பேருந்துகள் திங்கள்கிழமை மாலை முதல் இயக்கப்பட்டன. இதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனிடையே, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள ஜவுளி, நகைக் கடைகள் உள்பட பெரும்பாலான கடைகளும் திறக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் வேலூா் மாநகரின் கடை வீதிகளில் கூட்டம் அதிகரித்திருந்தது. அந்த வகையில், இம்மூன்று மாவட்டங்களிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
எனினும், பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டிருந்தாலும் கரோனா இன்னும் முழுமையாக ஓயவில்லை. மக்கள் பயணம் செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், கட்டாயமாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும் என சுகாதாரத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.