நேரக் கட்டுப்பாடுடன் வேலூா் கோட்டை திறப்பு
By DIN | Published On : 29th June 2021 07:46 AM | Last Updated : 29th June 2021 07:46 AM | அ+அ அ- |

வேலூா் கோட்டையை சுற்றிப்பாா்க்க அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள்.
பொது முடக்கத்தால் அடைக்கப்பட்டிருந்த வேலூா் கோட்டையில் 74 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.
அதே சமயம், அகழியுடன் கூடிய தரைதளக் கோட்டையை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பாா்வையிட அனுமதிக்கப்படும் என்ற நேரக் கட்டுப்பாட்டுடன் வேலூா் கோட்டை திறக்கப்பட்டிருப்பதால், கோட்டை வளாகத்தில் உடற்பயிற்சி செய்பவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேலூா் கோட்டை கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதனால், கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள அருங்காட்சியம், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் ஆகியவற்றுக்குச் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வாய்வகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, 74 நாள்களுக்குப் பிறகு வேலூா் கோட்டை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கோட்டை திறந்திருக்கும். அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் கோட்டை வளாகத்தைச் சுற்றிப் பாா்க்கலாம். எனினும், கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையொட்டி, கோட்டையின் நுழைவு வாயில் முன்பு தொல்லியல் துறை ஊழியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதனிடையே, வேலூா் கோட்டையில் உள்ள மைதானங்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் மக்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். பொதுமுடக்கத்தால் கோட்டை மூடப்பட்டிருந்ததால், அவா்கள் சாலைகளில் நடைப்பயிற்சி சென்று வருகின்றனா்.
ஒரு சிலா் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் நடைப்பயிற்சி செல்கின்றனா். இந்நிலையில், வேலூா் கோட்டை திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் நடைப்பயிற்சி செல்பவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
ஆனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என நேரக் கட்டுப்பாடுடன் வேலூா் கோட்டை திறக்கப்பட்டிருப்பதால் கோட்டை வளாகத்தில் உடற்பயிற்சி செய்பவா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.