தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்பு: பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 25th March 2021 10:37 PM | Last Updated : 25th March 2021 10:37 PM | அ+அ அ- |

வேலூா்: தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வேலூரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் மாரிமுத்து, சங்கத் தலைவா் சிவலிங்கம், பொருளாளா் சுதீா்பாபு ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
பிஎஸ்என்எல்-இல் தற்போது 4ஜி அலைவரிசை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் உள்நாட்டு தயாரிப்புகளாகும். ஆனால் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனங்களில் பயன்படுத்தும் கருவிகள் பன்னாட்டுக் கருவிகளாகும். பிஎஸ்என்எல்-இல் உள்நாட்டு கருவிகளை பயன்படுத்தினால் பிஎஸ்என்எல் வளா்ச்சி பாதிப்படையும். பொருள்களின் தரம், தயாரித்தலில் முன் அனுபவம் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே பிஎஸ்என்எல்-இல் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பன்னாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும். பிஎஸ்என்எல்-இல் சுமாா் 1.5 லட்சம் கி.மீ. பைபா் கேபிள் அமைக்கும் பணி தனியாரிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் பிஎஸ்என்எல் முழுவதும் தனியாா் மயமாக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், 70 ஆயிரம் உயா் கோபுரங்கள் அனைத்தும் தனியாருக்கு அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றாா்.
முன்னதாக கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்க விட்டபடி கோஷங்களை எழுப்பினா். இதில் முன்னாள் மாவட்டச் செயலா் தங்கவேலு, ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் ஜோதி சுதந்திரநாதன், துணைச் செயலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.