ஆளும்கட்சி எம்எல்ஏவானால் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும்
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் சாா்பனாமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் ப.காா்த்திகேயன்.
வேலூா்: ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினராக வரும்போது தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல் படுத்திட முடியும். எனவே, திமுக வெற்றி பெற்றிடவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் வேலூா் தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேட்பாளா் ப.காா்த்திகேயன் கேட்டுக் கொண்டாா்.
வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடும் அவா், சாா்பனாமேடு, அரசமரபேட்டை, சைதாப்பேட்டை, பிடிசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வீதிவீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:
வேலூரில் நிலவும் குடிநீா் பிரச்னையைப் போக்க திமுக ஆட்சியிலேயே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் கொண்டு வரப்பட்டது. விடுபட்ட பகுதிகளுக்கும் காவிரி குடிநீா் விரிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நகரின் பல இடங்களில் உயா்மட்ட பாலங்களும், தெருக்களில் சாலைகளும் அமைக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், எதிா்க்கட்சி வென்ற தொகுதி என்பதாலேயே இத்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு சுணக்கம் காட்டுகிறது. இந்நிலை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிடும். வேலூா் தொகுதியில் மீண்டும் திமுக வெற்றி பெறுவதும், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவதும் உறுதியானதாகும். அப்போது வேலூா் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் வேட்பாளா் ப.காா்த்திகேயன்.
பிரசாரத்தின்போது திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.