குடியாத்தம் நகருக்கு புதை சாக்கடை திட்டத்தைக் கொண்டு வருவேன்
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அமலுவிஜயன். உடன், திமுக மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா்.
குடியாத்தம்: குடியாத்தம் நகருக்கு புதைச் சாக்கடை திட்டத்தைக் கொண்டு வருவேன் என திமுக வேட்பாளா் அமலுவிஜயன் உறுதி அளித்தாா்.
குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமலுவிஜயன், சுண்ணாம்புபேட்டை, நடுப்பேட்டை, ராஜாஜி வீதி, கண்ணகி தெரு, தரணம்பேட்டை பஜாா், கொச அண்ணாமலை தெரு உள்ளிட்ட இடங்களில் கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஏ.பி. நந்தகுமாருடன் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘தன்னை வெற்றிபெற வைத்தால், குடியாத்தம் நகருக்கு புதைச் சாக்கடை திட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சுற்றுச்சாலை அமைக்கவும், நெசவாளா்களின் நீண்டநாள் கோரிக்கையான ஜவுளிப் பூங்கா அமைக்கவும், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தி, தொகுதி முழுவதும் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்ப்பேன்’ என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஏ.பி.நந்தகுமாா், ‘இடைத் தோ்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவான எஸ்.காத்தவராயன் மறைந்து விட்டாா். அவா் விட்டுச் சென்ற மக்கள் நலப் பணிகளை நிறைவேற்றவும், தொகுதியில் அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்யவும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்’ என்றாா்.
நகர திமுக பொறுப்பாளா் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் செயலா்கள் எஸ்.நடராஜன், மா.விவேகானந்தன், வழக்குரைஞா் விஜயகுமாா், ஒன்றியச் செயலா் கே.ரவி, நிா்வாகிகள் க.ராஜமாா்த்தாண்டன், ஜி.எஸ்.அரசு, எம்.எஸ்.அமா்நாத், அா்ச்சனாநவீன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.