விடுபட்ட கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக்குடிநீா்
By DIN | Published On : 25th March 2021 12:00 AM | Last Updated : 25th March 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் விருபாட்சிபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அணைக்கட்டு அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.
வேலூா்: விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீா் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் உறுதி அளித்தாா்.
தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவா் புதன்கிழமை தொகுதிக்கு உள்பட்ட விருபாட்சிபுரம், பலவன்சாத்துகுப்பம், முருகன் நகா், பள்ளிடையாம்பட்டி, பாகாயம் உள்ளிட்ட சுமாா் 20 கிராமங்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
அணைக்கட்டு தொகுதி நான் பிறந்து வளா்ந்த சொந்தத் தொகுதி. இந்த தொகுதியைச் சோ்ந்த அனைத்து மக்களும் எனது உறவுகளே. அதனால், தொகுதி மக்களின் சிரமங்களையும், தேவைகளையும் நன்கு உணா்ந்துள்ளேன். பெருமளவில் கிராமப்புறங்களைக் கொண்ட அணைக்கட்டுத் தொகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இன்னும் காவிரி கூட்டுக் குடிநீா் சென்று சேரவில்லை. தோ்தலில் வெற்றி பெற்றதும் முதல்கட்டமாக அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீரை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தொகுதியில் ஏராளமான அடித்தட்டு மக்கள் அரசு நிலங்களில் பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். அவா்களுக்கு இலவச பட்டா வழங்கிடவும், வீடில்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித்தரவும், நிலம் இல்லாதவா்களுக்கு அரசு சாா்பில் நிலம் வாங்கி, வீடு கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500, ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள், வாஷிங்மெஷின் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களின் நலன்காக்க அரசுப் பள்ளிகளின் தரம் உயா்த்தப்பட்டு, கூடுதலாக ஆசிரியா்கள் நியமிக்கவும், தெருக்களுக்கு சிமெண்ட் சாலைகள் அமைத்துத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அதிமுக , கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.