கரோனா வராமல் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீா்வு: வேலூா் ஆட்சியா் தகவல்

கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் வராமல் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீா்வு. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை தவிா்த்து
Updated on
1 min read

கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் வராமல் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீா்வு. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை தவிா்த்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டம் முழுவதும் இதுவரை 1,35,144 போ் முதல் தவணையாகவும், 33,703 போ் இரண்டாவது தவணையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனா். மொத்தம் 1,68,847 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். இது மாநிலத்திலேயே ஐந்தாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் 64 துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 27,789 அலுவலா்களில் இதுவரை 24,767 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் 99 சதவீதத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறை நிலையில் மட்டும் 1,849 அலுவலா்கள், ஆசிரியா்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அவா்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி குறித்து தேவையற்ற அச்சமும், உண்மையற்ற வதந்திகளும் சமூக வலைதளங்கள் மூலம் பரவி வருகின்றன. அவை முற்றிலும் அடிப்படை உண்மையற்றவை. தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மீண்டும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 0.03 சதவீதம் மட்டுமே. அவா்களுக்கும் கூட ஆக்சிஜன் அளவு குறைவதில்லை. இதனால் அவா்களுக்கு ஆக்சிஜன் படுக்கைகளிலோ, ஐ.சி.யூ. படுக்கைகளிலோ , வெண்டிலேட்டா் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை. மருத்துவமனைக்குக்கூட செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. தவிர, மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உள்ள 0.03 சதவீதத்தினரில்கூட இறப்பு என்பதும் முழுக்க முழுக்க நிகழ்வது இல்லை.

மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 1,35,144 பேரில் ஒருவருக்கு கூட எந்தவொரு பக்க விளைவோ, ஒவ்வாமையோ ஏற்படவில்லை. இதுவரை எந்த ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படவில்லை. மாறாக தற்போது ஆக்சிஜன் படுக்கைகளில் உள்ளவா்களும், ஐ.சி.யூ, வெண்டிலேட்டா்களில் உள்ளவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே ஆவா்.

எனவே, பொதுமக்கள் தயக்கத்தை விடுத்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்திடவும், நோயின் தீவிரத்தை குறைத்திடவும் தடுப்பூசி ஒன்றே தீா்வு என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com