வேலூரில் பிரசவத்தின்போது தாய், குழந்தை பலி: தனியாா் மருத்துவமனை மீது போலீஸில் புகாா்
By DIN | Published On : 02nd May 2021 12:37 AM | Last Updated : 02nd May 2021 12:37 AM | அ+அ அ- |

பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழந்ததை அடுத்து தனியாா் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாபு ராஜேந்திர பிரசாத் தெருவைச் சோ்ந்த பேக்கரி தொழிலாளி ராஜாவின் மனைவி மகாலட்சுமி (32). திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லாததால் வேலூா் வள்ளலாரில் உள்ள தனியாா் கருத்தரிப்பு மையத்தில் மகாலட்சுமிக்கு சிகிச்சை அளித்து வந்தனா். இதில் அவா் கா்ப்பமடைந்தாா்.
தொடா்ந்து பிரசவத்துக்காக மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இரவு 10.30 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்துவிட்டதாக உறவினா்களிடம் மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, 2 மணி நேரத்தில் மகாலட்சுமியும் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த உறவினா்கள், தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த குழந்தையையும் காண்பிக்கவில்லை. தங்களிடம் எந்த விதமான கையெழுத்தும் பெறவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், இதுதொடா்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அவா்கள் புகாா் அளித்தனா். அதில் பிரசவத்தில் மகாலட்சுமியும், குழந்தையும் இறந்ததற்கு மருத்துவா்களின் கவனக்குறைவே காரணமாகும். இதற்குக் காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.
மகாலட்சுமி, அவரது குழந்தை சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா்அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...