அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள்: அமைச்சா் தகவல்
By DIN | Published On : 19th May 2021 12:00 AM | Last Updated : 19th May 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டாா் .
அப்போது அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கூடுதலாக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் குறித்து அமைச்சா் ஆா்.காந்தி வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கூடுதலாக 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.