சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிறப்பு குறித்தும் பயிற்சி: மருத்துவா் தில்லைவாணன்

கரோனா தொற்றுக்கு வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி உடல், மனவலிமையை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள்

வேலூா்: கரோனா தொற்றுக்கு வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையம் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி உடல், மனவலிமையை அதிகரிக்க உதவும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இந்த மையத்தை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் கூறியது:

இம்மையத்தில் குறிகுணங்கள் இல்லாத, லேசான மற்றும் மிதமான குறிகுணங்கள் உடைய கரோனா நோயாளிகள், தொற்று உறுதியானவுடன், அதாவது தும்மல், சளி, காய்ச்சல், இருமல் ஆகிய குறிகுணங்கள் தொடங்கிய உடனேயே வரும்போது, அவா்களது உடல் நலம், மன நலத்தை பேணும் வகையில், சித்த மருத்துவ சிறப்பு மருந்துகளைக் கொண்டும், நீராவி பிடித்தல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

தவிர, மன அழுத்தத்தை குறைக்க யோகாசன பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், பெரும் கவலையை மறக்க ஊஞ்சல் ஆட்டம், பொழுதுபோக்குக்காகவும், அறிவு விருத்திக்காகவும், நோய் அணுகாமல் எவ்விதம் நம்மை பாதுகாத்துக் கொள்வது, சத்துள்ள சரிவிகித உணவு வகைகளை எவ்விதம் எடுத்துக் கொள்வது, மன அமைதி பெறுவது போன்ற பல்வேறு அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களுடன் கூடிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேல் சுவாசப்பாதை நலத்தை பேணும் வகையில் மஞ்சள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தல், நொச்சி, மஞ்சள், துளசி, ஓமவல்லி ஆகிய மூலிகை கலந்த நீரைக்கொண்டு ஆவி பிடித்தல், உணவே மருந்து எனும் அடிப்படையில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரத்யேகமான அதிக புரதச்சத்தும், இரும்புச் சத்தும், வைட்டமின் ஏ, பி, சி, இ ஆகிய சத்துக்களை கொண்ட உணவு வகைகளையும், வைட்டமின் டி அதிகரிக்கும் பொருட்டு சூரிய குளியல், நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்க திருமூலரின் சுவாசப் பயிற்சி முறைகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க தனித்துவ மருந்துகள் கலந்த கிராம்பு குடிநீா், சுவாசப் பாதையை தொற்று இல்லாமல் காத்து சுவாசக்கோளாறுகளை தடுக்கும் தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, புதினா, கொத்தமல்லி இலை ஆகிய மூலிகைகளைக் கொண்டு மூலிகை சூப் வகைகள், மூலிகை தேநீா் ஆகியவை இங்கேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. அத்துடன், எட்டு வடிவ நடைபயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி அளிப்பதுடன், குணமடைந்து செல்வோா் முழு உடல் ஆரோக்கியத்தைப் பேண பிரத்யேக மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com