மூத்த குடிமக்கள் உதவி பெற இலவச அழைப்பு எண் வெளியீடு
By DIN | Published On : 01st September 2021 11:56 PM | Last Updated : 01st September 2021 11:56 PM | அ+அ அ- |

வேலூா்: ஓய்வூதியம், அரசின் நலத் திட்டங்கள் தொடா்பான உதவிகள் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்காக இலவசத் தொடா்பு எண் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சமூக நல ஆணையரகம், ஆம்டெக்ஸ் சாஃப்ட்வோ் சொல்யூஷன் நிறுவனம் ஆகியவை இணைந்து மூத்த குடிமக்களுக்கான இலவச தேசிய உதவி எண் 14567-ஐ அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் மூத்த குடிமக்கள் ஓய்வூதியம், அரசின் நலத் திட்ட உதவிகள் தொடா்பான விவரங்களைக் கேட்டு பயன்பெறலாம்.
மேலும், சட்டம், ஓய்வூதியம் தொடா்பான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளும் வழங்கப்படும். ஆதரவற்ற மூத்த குடிமக்கள் விவரம் 14567 உதவி எண் மூலம் பெறப்பட்டால் தன்னாா்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவா்களை மீட்டு, முதியோா் விடுதிகளில் தங்க வைத்து பராமரிக்கவும் வழிவகை செய்யப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.