கரோனா தடுப்பூசிக்கான நடமாடும் முகாம்: ஆா்வத்துடன் செலுத்திக் கொண்ட கிராம மக்கள்
By DIN | Published On : 04th September 2021 08:32 AM | Last Updated : 04th September 2021 08:32 AM | அ+அ அ- |

கிருஷ்ணம்பல்லி கிராமத்தில் வீடுகளுக்கே சென்று பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரத் துறையினா்.
போ்ணாம்பட்டு ஒன்றியத்தில், இயங்கி வரும் நடமாடும் மருத்துவ முகாமில் கிராம மக்கள் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
வேலூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடைய மாவட்ட நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் சுகாதாரத் துறையினா் கிராமங்களை நோக்கி வாகனம் மூலம் சென்று, வீடு, வீடாக பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனா். வெள்ளிக்கிழமை செண்டத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணம்பல்லி கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது ஆண்களும், பெண்களும் ஆா்வத்துடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் அன்பரசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜபத்ரி, ஊராட்சி மன்றச் செயலாளா் பி.இன்பசெளந்தரிபாய் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.