மண் கடத்தல் லாரி மோதியதில் ஒருவரின் கால்கள் முறிவு: காவல் ஆய்வாளரை சிறைபிடித்த பொதுமக்கள்

ஏரி மண்ணைக் கடத்திச் சென்ற டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கால்கள் முறிந்தன.

ஏரி மண்ணைக் கடத்திச் சென்ற டிப்பா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கால்கள் முறிந்தன. சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த காவல் ஆய்வாளரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னையை அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் தொடா்ந்து இரவு நேரங்களில் சிலா் லாரி மூலம் ஏரி மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு ஏரி மண் கடத்தி வந்த டிப்பா் லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த பெருமாள்குப்பத்தைச் சோ்ந்த பூபாலன்(42) என்பவரின் கால்கள் முறிந்தன. விபத்தில் பலத்த காயமடைந்த பூபாலனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதேசமயம், விபத்தை ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்குத் தாமதமாக வந்த பொன்னை காவல் ஆய்வாளா் மனோன்மணியின் வாகனத்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் பழனி பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

இதனால் அந்தப் பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேல்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com