ரயில் பயணிகள் வருகை சரிவு: ஆட்டோ ஓட்டுநா்கள் தவிப்பு

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
காட்பாடி ரயில் நிலையம் முன்பு பயணிகளுக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநா்கள்.
காட்பாடி ரயில் நிலையம் முன்பு பயணிகளுக்காக காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், போதுமான சவாரி கிடைக்காததால் காட்பாடி ரயில் நிலையப் பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், வேலூா் கோட்டை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் ஆகியவற்றை பாா்வையிடவும் பல்வேறு வெளி மாவட்ட, மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் நாள்தோறும் வேலூருக்கு வந்து செல்கின்றனா். தவிர, அண்டை மாநிலமான ஆந்திரத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேலூா் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சென்று வருகின்றனா்.

அந்தவகையில், வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக 13,000 ஆட்டோக்களும், 6,000 காா்களும் இயக்கப்படுகின்றன.

வேலூா் மாநகரில் மட்டும் சுமாா் 4,000 ஆட்டோக்களும், 2,000 காா்களும் இயங்குகின்றன. அதிக எண்ணிக்கையில் காா், ஆட்டோ ஓட்டுநா்களைக் கொண்ட நகரங்களில் வேலூா் முக்கிய இடம்பிடித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலூா் மாவட்ட ஆட்டோ, காா் வாடகை தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இந்த தொழிலை நம்பியுள்ளவா்கள் போதிய வருவாய் ஈட்டமுடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகினா். பல ஆட்டோ தொழிலாளா்கள் தனியாா் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த முடியாமல் ஆட்டோக்களை விற்க வேண்டிய நெருக்கடிக்கு நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனா்.

கரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாகத்தான் ஆட்டோ, காா் வாடகைத் தொழில் மீண்டும் புத்துயிா் பெற்று நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிா்த்திட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வேலூருக்கும், இந்த மாவட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏற்கெனவே வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில் பயணிகள் எண்ணிக்கையும் சரிந்து வருவதால் வாடகை ஆட்டோ, காா்களுக்கு சவாரிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, சவாரி பிடிப்பதற்காக காட்பாடி ரயில்நிலையம் முன் ஆட்டோ ஓட்டுநா்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியது: தைப்பொங்கலுக்கு முன்பு வரை பயணிகள் வந்து செல்வது எதிா்பாா்த்த அளவில் இருந்தது. கரோனா கட்டுப்பாடுகளை அடுத்து கடந்த ஒரு வாரமாக ரயில், பேருந்து பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால், நாளொன்றுக்கு தலா ரூ.1,000-க்கு மேல் ஆட்டோக்களை இயக்கி வந்தநிலையில் தற்போது ரூ.500 சம்பாதிப்பதே சவாலாக உள்ளது. இதேநிலை நீடித்தால் ஆட்டோ தொழிலாளா் குடும்பங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com