வேலூர் தங்கக்கோயிலில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை திறப்பு

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் திறக்கப்பட்ட உலகில் மிக உயரமான நடராஜர் சிலை.
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் திறக்கப்பட்ட உலகில் மிக உயரமான நடராஜர் சிலை.
Updated on
2 min read

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 15,000 கிலோ ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா திறந்து வைத்தார்.

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம், 18 அடி அகலம் 15,000 கிலோ ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செய்ய தொடங்கப் பட்டது. தற்போது முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த சிலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் தங்கக் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; பழமையும், தொன்மையும், அழகும் வாய்ந்த இந்திய சமூக கலாச்சாரத்தில் கோயில்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கோயில்களுக்குச் செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கிறது. கோயில்களில்தான் தெய்வீகத்தன்மை உணர முடியும். மனித சமூகத்திற்கு கோயில் அவசியமானது. கோயிலில் நடக்கும் சமுதாய பூஜைகளுக்கும், ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் தொடர்புள்ளது. கோயிலுக்கு செல்லும்போது நாம் தெய்வத்திற்கு கொடுத்ததைவிட பல மடங்கு சக்தி, அமைதி நமக்கு கிடைக்கிறது.

சக்கரவர்த்திகளாக பல பகுதிகளை ஆண்ட ராஜாக்கள் கோயில்கள் மூலம்தான் இன்றும் பேசப்படுகின்றனர். ராஜராஜ சோழன் குறித்து தற்போதும் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் கட்டிய தஞ்சை பெரிய கோயில் தான். அந்தவகையில், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007-ஆம் ஆண்டு ஸ்ரீபுரத்தில் தங்கக்கோயில் அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கைகளால் தற்போதும் அபிஷேகம் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, 9 அடி உயரத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1200 கிலோ வெள்ளியால் சக்தி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, உலகில் மிகப்பெரிய அளவில் 23 அடி உயரத்தில் நடராஜர் சிலையும் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டு இந்த நடராஜர் சிலையை வழிபடும்போது ஆனந்தம் தானாக வரும். இந்த நடராஜருக்கு என தனியாக கோயில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டு சாஸ்திர முறைப்படி விநாயகர், நடராஜர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அதுவரை தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே நடராஜருக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இங்கு தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்த சிலை உருவாக காரணம் இருந்த நாராயணி பீட நிர்வாகிகள், இதனை உருவாக்கிய அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்.

ஸ்ரீபுரத்தில் சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு, சிவன் வழிபாடு பெருமாள் வழிபாடு ஆகியவை உள்ளன. இந்து தர்மத்தில் உள்ள ஆறு வழிபாட்டு முறைகளில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை. அதுவும் விரைவில் அமையும் என்றார். அப்போது, நாராயணி பீடத்தின் இயக்குநர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com