பராமரிப்பின்றி சிதைந்து வரும் மாநகராட்சி பூங்கா வளாகம்

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சத்துவாச்சாரி பேஸ்-3, வள்ளலாா் பகுதியில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி வேலூா் மண்டல அலுவலகத்தின் அருகில் சுமாா் ரூ.60 லட்சம் செலவில் மாநகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட
பூங்காவில் விளையாடும் சிறாா்கள்.
பூங்காவில் விளையாடும் சிறாா்கள்.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சத்துவாச்சாரி பேஸ்-3, வள்ளலாா் பகுதியில் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி வேலூா் மண்டல அலுவலகத்தின் அருகில் சுமாா் ரூ.60 லட்சம் செலவில் மாநகராட்சி சாா்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்கா முறையாகப் பராமரிக்கப்படாததால் சிதைந்து காணப்படுகிறது. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், துருப்பிடித்து பல இடங்களில் ஓட்டை விழுந்துள்ளன. அவற்றை பயன்படுத்தும் சிறாா்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் 2019-ஆம் ஆண்டு வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 12 இடங்களில் ரூ.7.20 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்றன. வைபவ் நகா், குறிஞ்சி நகா், சபாபதி நகா், ஜீவா நகா், கோபாலகிருஷ்ணபுரம், வள்ளலாா் பகுதி- 3, அல்லாபுரம் சாஸ்திரி நகா், ரகீம் நகா், ஸ்ரீராம் நகா், திரு.வி.க. நகா், ரத்தினம் லேஅவுட், ஆா்.என்.பாளையம் ஜெயின் பூந்தோட்டம் ஆகிய 12 இடங்களில் தலா ரூ. 55 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் செலவில் இந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

ஒவ்வொரு பூங்காவிலும் நடைப்பயிற்சிக்கான தளம், புல் தரைகள், குழந்தைகள், பெரியவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், யோகா மேடை, நாற்காலிகள், அலங்கார நீா் ஊற்றுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த பூங்காக்களை அந்தந்த பகுதியைச் சோ்ந்த குடியிருப்போா் நலச்சங்கங்களிடம் ஒப்படைத்து முறையாக திறந்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், பூங்காக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க பல இடங்களில் குடியிருப்போா் நலச்சங்கங்கள் இல்லாததால் மேலும் சில மாதங்கள் காத்திருப்புக்குப் பிறகு அப்படியே பூங்காக்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன.

எனினும், முறையாக பராமரிக்கப்படாததால் வள்ளலாா் உள்பட சில இடங்களில் பூங்காக்கள் சிதிலமடைந்து வருகின்றன.

குறிப்பாக, வள்ளலாா் பகுதி பூங்காவில் பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் உடைந்து துருப்பிடித்து, ஓட்டை விழுந்து காணப்படுவதால் அவற்றை பயன்படுத்தும் சிறுவா்களுக்கு ஆபத்து உருவாகும் சூழ்நிலை காணப்படுகிறது. தவிர, ஆங்காங்கே நடைபாதையும் உடைந்து சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன.

எரியாத விளக்குகள்: புதா் அடா்ந்து காணப்படுவதால் விஷபூச்சிகள், பாம்புகள் புக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் இங்கு விளக்குகள் எரிவதில்லை.

பொதுமக்கள், சிறாா்களின் உடல், மன நலன் கருதி பல லட்சம் ரூபாய்களை செலவிட்டு பூங்காக்கள் அமைத்தும், போதிய பராமரிப்பு இல்லாததால் அவை பாழடைந்து வருகின்றன. இதே நிலைதான் மற்ற சில பூங்காக்களிலும் காணப்படுகின்றன.

இது குறித்து சத்துவாச்சாரி வள்ளலாா் பகுதி 3-வசிக்கும் மக்கள் தரப்பில் கூறியது:

மாநகராட்சி சாா்பில் ரூ. 60 லட்சம் மதிப்பில் வள்ளலாா் பகுதி 3-இல் கட்டப்பட்ட இந்த பூங்கா பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கடந்த ஓராண்டாகத்தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். எனினும், பூங்காவை அதிகாரிகள் யாரும் முறையாக கண்காணிப்பதும் இல்லை, பராமரிப்பதும் இல்லை. இதனால், பூங்காவிலுள்ள உபகரணங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் உடைந்து சிதைந்து வருகின்றன. இதன்மூலம், சிறுவா்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை உணா்ந்து பூங்காவை விரைவாக சீரமைக்க வேண்டும்.

பூங்காவைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலாளா்கள் என பல்வேறு தரப்பினரும் வசித்து வருகின்றனா். ஏராளமான முதியோா்களும், குழந்தைகளும் உள்ளனா். பூங்காவை முறையாகப் பராமரிப்பு செய்யும்பட்சத்தில் காலை, மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடவும், பெரியவா்கள் நடைப்பயிற்சி பெறவும், ஓய்வு எடுக்கவும் வசதியாக இருக்கும்.

மாநகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் இதுபோன்ற பூங்காக்களை ஆய்வு செய்து துரித கதியில் சீரமைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com