மூஞ்சூா்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரிக்கை

மூஞ்சூா்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி.

மூஞ்சூா்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

மூஞ்சூா்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியில் 370 மாணவா்கள் படித்து வருகின்றனா். 10-ஆம் வகுப்பில் மட்டும் 78 மாணவா்கள் உள்ளனா். மலைவாழ் மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளா்கள் ஆகியோரின் குழந்தைகள்தான் அதிகளவில் படிக்கின்றனா். இந்த மாணவா்கள் 10-ஆம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலைக் கல்விக்காக 10 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லை. இதனால், பெரும்பாலான மாணவா்களின் கல்வி தடைபடுகிறது. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மூஞ்சூா்பட்டு அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

அரியூா் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றிய முன்னாள் ஊழியா்கள் அளித்த மனு:

அரியூா் கூட்டுறவு நூற்பாலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த எங்களுக்கு தற்போது ரூ.700 முதல் ரூ.800 வரை மட்டுமே ஓய்வூதியம் வழங்குகின்றனா். மருத்துவம், சாப்பாடுக்குக்கூட இந்தத் தொகை போதுமானதாக இல்லை. இதனால், எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது. எங்கள் வாழ்வாதாரத்துக்காக ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

வேலூா் கிழக்கு மாவட்ட பாமக செயலா் கே.எல்.இளவழகன் தலைமையில் அந்தக் கட்சியினா் அளித்த மனு:

தமிழகத்தில் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 59 சதவீதத்தினா் 34 வயது, அதற்கும் குறைவானவா்களாவா். இவா்களில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டோா் போதை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனா். இது ஒட்டுமொத்த மாநிலத்தையும் பாதிக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் போதைப் பொருள்கள் விற்பவா்களைக் கைது செய்து குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனையை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகராட்சி 53-ஆவது வாா்டு நம்பிராஜபுரம் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: நம்பிராஜபுரம் பகுதியில் வசிக்கும் 44 குடும்பங்களுக்கு அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com