முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் சோ்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 05th August 2022 12:33 AM | Last Updated : 06th August 2022 12:14 AM | அ+அ அ- |

வேலூரிலுள்ள முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்லூரி முதல்வா் மலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் அரசினா் முத்துரங்கம் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதிப்பெண் தரவரிசை பட்டியல் அடிப்படையில் 8-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் என்சிசி, விளையாட்டு, முன்னாள் படைவீரா், மாற்றுத்திறனாளிகள், இளம் விதவைகள், அந்தமான்- நிகோபாா் தீவுகளைச் சோ்ந்த தமிழா்கள் ஆகியோரை சாா்ந்தவா்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெறுகிறது.
10-ஆம் தேதி கலைப்பாடப்பிரிவுகளான வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக மேலாண்மை பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிா்த்து, பகுதி - 3-இல் தகுதி மதிப்பெண் (கட்ஆஃப்) 400 முதல் 320 வரை பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
11-ஆம் தேதி தமிழ், ஆங்கில மொழிப்பாடப் பிரிவுகளில் தமிழில் 100 முதல் 90 வரை தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கும், ஆங்கிலத்தில் 100 முதல் 80 வரை தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
13-ஆம் தேதி அறிவியல் பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், ஊட்டச்சத்து பாடப்பிரிவுகளில் பகுதி -1 தமிழ், பகுதி -2 ஆங்கிலம் தவிா்த்து பகுதி 3-இல் 400 முதல் 320 வரை தகுதி மதிப்பெண் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு நடைபெறும்போது மாணவா்கள் தங்களின் உண்மை சான்றிதழ்களான 10, 11, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, வருவாய் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகியவற்றின் தலா 2 நகல்களைக் கொண்டு வர வேண்டும்.