வேலூா் கோட்டை பூங்கா கம்பிவேலி உயரம் அதிகரிப்பு
By DIN | Published On : 05th August 2022 12:34 AM | Last Updated : 06th August 2022 10:22 PM | அ+அ அ- |

இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேலூா் கோட்டை பூங்காவைச் சுற்றியுள்ள கம்பிவேலிகளின் உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், பூங்காவை முறையாக பராமரித்து சீரமைக்கவும், நாற்காலி, நடைபாதை வசதிகளை ஏற்படுத்தவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
வேலூரிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கோட்டைக்கு பல்வேறு வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா். அவ்வாறு கோட்டையைப் பாா்வையிட வருவோா் அங்குள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அரசு அருங்காட்சியம், கோட்டை மதில் சுவா்களையும் பாா்வையிடுகின்றனா்.
மாலை நேரங்களில் கோட்டைக்கு வருவோரில் பெரும்பாலானோா் கோட்டை நுழைவு வாயிலில் உள்ள பூங்காவுக்கு குடும்பத்துடன் வருவதையே விரும்புகின்றனா். இதற்காக கோட்டை நுழைவு வாயிலுக்கு இருபுறமும் 2 பூங்காக்கள் உள்ளன. இதில், சாரதி மாளிகைக்கு எதிரில் உள்ள பூங்காவை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த பூங்கா இரவு 8 மணி வரை திறந்திருக்கிறது. இரவு நேரங்களில் பலா் பூங்காவின் கம்பிவேலிகளைத் தாண்டி உள்ளே குதித்து சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
தவிர, பகல் நேரங்களிலும் பொதுமக்கள் முறையாக வழிகளை பின்பற்றாமல் பூங்காவில் உள்ள கம்பி வேலியைத் தாண்டி உள்ளே செல்கின்றனா்.
இதைத்தடுக்க தொல்லியல் துறை சாா்பில், கோட்டை முன்புள்ள கம்பிவேலியின் உயரத்தை இரண்டரை அடி அதிகரிக்கப்பட்டு, வருகிறது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக கோட்டை முன்பு உள்ள கம்பிவேலிகள் இரண்டரை அடி உயரம் அதிகரிக்கப்படுகிறது.
படிப்படியாக கோட்டையைச் சுற்றிலும் கம்பிவேலியின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
அதேசமயம், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கோட்டை பூங்காவில் அமருவதற்கு நாற்காலி, நடைபாதை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், கோட்டை அகழி படகு போக்குவரத்து பகுதியில் உள்ள பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
இங்குள்ள அழகிய சிற்பங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.
முறையான பராமரிப்பு இல்லாததால் செடிகள், புற்கள் வளா்ந்துள்ளன. புதா்களால் மண்டியிருப்பதால் பூங்காவில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது. எனவே, இந்தப் பூங்காவை தொல்லியல் துறையினா் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
Image Caption
வேலூா் கோட்டை பூங்காவைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பிவேலி.